மாவட்ட செய்திகள்

திருவாரூர் அருகே ஊராட்சி அலுவலகத்தை உடைத்து வேட்பு மனுக்களை திருட முயற்சி மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவாரூர் அருகே ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து வேட்பு மனுக்களை திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

தினத்தந்தி

குடவாசல்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதில் கொரடாச்சேரி ஒன்றியத்துக்கு 30-ந் தேதி தேர்தல் நடக்கிறது. குடவாசல் அருகே உள்ள வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் வடகண்டம் ஊராட்சி அலுவலகத்தின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த மர பீரோவை உடைத்தனர். மரபீரோவில் வாக்காளர் பட்டியல், ரூ.1,200 மற்றும் சில ஆவணங்கள் இருந்தன. இதில் ரூ.1,200-ஐ மர்ம நபர்கள் எடுத்துக்கொண்டு இரும்பு பீரோவை திறந்து வேட்பு மனுக்களை திருட முயன்றனர். ஆனால் பீரோவை திறக்க முடியவில்லை. இதனால் மர்ம நபர்கள் வாக்காளர் பட்டியலை எடுத்து ஊராட்சி அலுவலகத்தின் பின்புறமாக வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

விசாரணை

இரும்பு பீரோவில் நேற்று முன்தினம் வரை ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு தாக்கல் செய்த 22 வேட்பு மனுக்கள் இருந்தன. மர்ம நபர்களால் பீரோவை திறக்க முடியாததால் வேட்பு மனுக்கள் தப்பின. நேற்று காலை ஊராட்சி அலுவலகம் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்ட மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து குடவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குடவாசல் போலீசார் மற்றும் கொரடாச்சேரி தேர்தல் நடத்தும் அலுவலர் வாசுதேவன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

மனுக்கள்

மேலும் அலுவலகத்தில் இருந்த பீரோவை திறந்து பார்த்த போது பீரோவில் 22 மனுக்களும் பத்திரமாக இருந்தன.

ஊராட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்த மர்மநபர்கள் யார்? அவர்கள் ஏன் வேட்பு மனுக்களை திருடி செல்ல முயல வேண்டும் என்ற கோணத்தில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேட்பு மனுக்கள் இருந்த ஊராட்சி அலுவலகத்தை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் குடவாசல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்