கம்பம்,
கம்பம் அருகே புதுக்குளம் பகுதியில், பல ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களுக்கு செல்லும் வழியில், அரசு மதுபான கடை ஒன்று உள்ளது. இங்கு கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மதுபானம் வாங்கி வந்து, மலையடிவார பகுதியில் உள்ள புளியந்தோப்புகளில் குழுவாக அமர்ந்து குடிக்கின்றனர்.
மேலும் அந்த பகுதியில் சிகரெட், பீடியை புகைக்கின்றனர். பின்னர் தீயை அணைக்காமல் அப்படியே வீசி செல்கின்றனர். மதுபோதையில் சிலர் வேண்டுமென்றே வனப்பகுதியில் தீ கொளுத்தி வருகின்றனர். இதனால் காய்ந்த சருகுகளின் மீது தீப்பற்றி விடுகிறது. அந்த தீ, மானாவாரி நிலங்களில் உள்ள புளியமரங்களுக்கும் பரவி எரிந்து நாசமாகின்றன.
காற்று வீசும் போது தீ வேகமாக பரவி வனப்பகுதிக்கும் சென்று விடுகிறது. இதுமட்டுமின்றி மான், காட்டுப்பன்றி, உடும்பு, நரி, குரங்கு, எறும்புதிண்ணி, அணில் உள்ளிட்ட விலங்குகளும், மயில் உள்ளிட்ட பறவைகளும் ஓட்டம் பிடிக்கின்றன. சில சமயத்தில் வனவிலங்குகளும், பறவைகளும் தீயில் கருகி பலியாகும் சம்பவம் நடந்து வருகிறது.
கம்பம் வனப்பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன. குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் பலியானார்கள். இதுபோன்ற நிகழ்வு, கம்பம் வனப்பகுதியிலும் ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு வனத்துறையினருக்கு உள்ளது.
எனவே மலை அடிவாரப்பகுதியில் அமர்ந்து மதுபானம் குடிப்போர் மீது போலீசாரும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, கம்பம் வனப்பகுதியில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்டது. அதனை கட்டுப்படுத்த முயன்ற வனஊழியர் ஒருவர் தீயில் கருகி பலியானார். இந்தநிலையில் கம்பம் மேற்கு பகுதியில் உள்ள மலையடிவாரத்தில், சமீபகாலமாக அடிக்கடி தீப்பற்றி எரிகிறது. இதற்கு அடிவார பகுதியில் அமர்ந்து மதுபானம் குடிப்பவர்களே காரணமாக உள்ளனர். எனவே வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.