மும்பை,
இந்திய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மும்ப 27 மாடி அன்டிலா' குடியிருப்பு அருகே கடந்த பிப்ரவரி 25-ந் தேதி வெடிகுண்டுகள் நிரப்பிய கார் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அந்த காரின் உரிமையாளரான தானேயை சேர்ந்த வியாபாரி ஹிரன் மன்சுக் மார்ச் 5-ந் தேதி மும்ரா கழிமுக கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார்.
இந்த வழக்கில் மார்ச் 13-ந் தேதி மும்பை குற்றப்புலனாய்வு பிரிவு உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும் அவரது கூட்டாளியான உதவி இன்ஸ்பெக்டர் ரியாஸ் காசி, இடைநீக்கம் செய்யப்பட்ட போலீஸ்காரர் விநாயக் ஷிண்டே, கிரிக்கெட் சூதாட்டக்காரர் நரேஷ் கோர் ஆகியோரை கைது செய்து இருந்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு காரை நிறுத்தி, அதனை தொடர்புபடுத்தி 2 பேரை என்கவுன்டரில் சுட்டுக்கொல்ல உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாசே திட்டமிட்டதாகவும், அந்த சதி திட்டம் பலனளிக்காமல் போய் விட்டதாகவும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இந்த தகவலை என்.ஐ.ஏ. அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
மேலும் வெடிண்டு கார் உரிமையாளர் ஹிரன் மன்சுக் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற மர்மமும் நீடிக்கிறது.
இந்த நிலையில் ஹிரன் மன்சுக், காந்திவிலியை சேர்ந்த ஒரு போலீஸ் அதிகாரி தன்னை அழைத்ததாகவும், அவரை சந்திக்க செல்வதாகவும் தனது மனைவி விமாலாவிடம் காலையான ஒரு நாளுக்கு முன் கூறிவிட்டு சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக விமலா அளித்த தகவலின் பேரில், அந்த போலீஸ் அதிகாரி யார் என்று என்.ஐ.ஏ. தீவிர விசாரணை நடத்தியது. இதில், அவர் காந்திவிலி குற்றப் புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் மானே என்று தெரியவந்தது.
இதையடுத்து அவரை ஆஜராக சம்மன் அனுப்பிய நிலையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் மானே நேற்று முன்தினம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் முன்பு ஆஜரானார். அவரிடம் நேற்று 2-வது நாளாகவும் தீவிர விசாரணை நடந்தது. இந்த விசாரணையை தொடர்ந்து சுனில் மானே அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். கோர்ட்டிலும் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இதன் மூலம் வெடிகுண்டு கார் வழக்கில் இதுவரை போலீஸ் துறையை சேர்ந்த 4 பேர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.