நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடுஅகரம் காலனியை சேர்ந்தவர் வினித் (வயது 19). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த புஷ்பராஜ் ( 25) என்பவருக்கும் இடையே முன்விரோத தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வினித் தரப்பை சேர்ந்தவர்களுக்கும், புஷ்பராஜ் தரப்பை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் உருட்டுக்கட்டை மற்றும் கற்களால் தாக்கிக்கொண்டனர்.
இதில் வினித் தரப்பை சேர்ந்த முரளி என்பவர் கத்தியால் குத்தப்பட்டார். மேலும் புஷ்பராஜ் தரப்பை சேர்ந்த குடிநீர் தொட்டி இயக்குபவரான ஜானகிராமன் என்பவரது வீட்டில் இருந்த டி.வி., மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டது. மேலும் ஒரு மோட்டார் சைக்கிளும் சேதப்படுத்தப்பட்டது. இது குறித்த தகவலின் பேரில் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மோதலில் ஈடுபட்டவர்களை தடுத்தனர்.
பின்னர் மோதலில் படுகாயமடைந்த வினித், விமல்ராஜ், புனிதா, சிவலோஷினி, மணி, முரளி, ராஜேந்திரன், புஷ்பராஜ், ஹரிணி ஆகிய 9 பேரை மீட்டு கடலூர் மற்றும் பண்ருட்டி அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் மேல்சிகிச்சைக்காக முரளி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து இருதரப்பினர் சார்பிலும் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வினித், புஷ்பராஜ் உள்பட 21 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோதல் சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு 40-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.