மாவட்ட செய்திகள்

பெருந்துறை அருகே நடுரோட்டில் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதல்; என்ஜினீயர் பலி - டிரைவர் மீது வழக்கு

பெருந்துறை அருகே நடுரோட்டில் நின்ற லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் என்ஜினீயர் ஒருவர் பலியானார். இது தொடர்பாக லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

பெருந்துறை,

அந்தியூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமணி. இவருடைய மகன் வினோத்குமார் (வயது 28). என்ஜினீயரிங் முடித்துவிட்டு கோவை போத்தனூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இன்னும் திருமணம் ஆகாதவர்.

நேற்று முன்தினம் இரவு வினோத்குமார் மோட்டார்சைக்கிளில் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலத்தில் இருந்து திங்களூர் ரோட்டில் சென்றுகொண்டு இருந்தார். மேட்டுப்புதூர் என்ற இடத்தில் சென்றபோது, நடுரோட்டில் ஒரு லாரி நின்றுகொண்டு இருந்தது. அந்த இடத்தில் இருள் சூழ்ந்து இருந்ததால் லாரி நிற்பது தெரியாமல் மோட்டார்சைக்கிள் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.

இதில் வினோத்குமாருக்கு தலை, கண், நெற்றி என பல இடங்களில் படுகாயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வினோத்குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்கள்.

இதுபற்றி உடனடியாக பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று வினோத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள்.

விபத்தை ஏற்படுத்தும் வகையில் லாரியை நடுரோட்டில் நிறுத்தி இருந்த டிரைவர் சேலம் மாவட்டம் சங்ககிரி கஸ்தூரி பட்டியை சேர்ந்த அய்யன்துரை என்பவர் மீது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்