மாவட்ட செய்திகள்

ராமநகர் அருகே, ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை கன்னட நடிகை, தாய் உள்பட 4 பேர் கைது

ராமநகர் அருகே ஆயுதங்களால் தாக்கி ரவுடி கொலை செய்யப்பட்டதில் கன்னட நடிகை, அவரது தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பணம் கேட்டு மிரட்டியதால் தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

தினத்தந்தி

ராமநகர்,

ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா புறநகர் ராம்புரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில்(வயது 29), ரவுடியான இவர், ராம்புராவில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தோட்டத்து வீட்டில் சுனில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை ஆயுதங்களால் தாக்கி மர்மநபர்கள் கொலை செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.

இதுகுறித்து சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவந்தனர். மேலும் தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், ரவுடி சுனில் கொலை தொடர்பாக கன்னட நடிகை பிரியங்கா, அவரது தாய் நாகம்மா, ராமநகரை சேர்ந்த மனு என்ற மகாதேவகவுடா, சிவராஜ் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகை பிரியங்கா கன்னடத்தில் வெளியான ஐ.பி.சி. செக்ஷன் 300 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சில கன்னட படங்களிலும், ஒரு தெலுங்கு படத்திலும் அவர் நடித்துள்ளார். நடிகை பிரியங்காவிடம் கார் டிரைவராக சுனில் வேலை பார்த்துள்ளார். பிரியங்காவின் உறவினர் மகன் தான் சுனில் ஆவார். இதனால் தான் அவரை தனது கார் டிரைவராக பிரியங்கா வைத்திருந்தார்.

டிரைவராக இருந்த சுனில் ரவுடி சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இது பிரியங்காவுக்கு பிடிக்கவில்லை. இதையடுத்து, டிரைவர் வேலையில் இருந்து சுனிலை, அவர் நிறுத்திவிட்டார். இதுதொடர்பாக பிரியங்காவுடன் அடிக்கடி ரவுடி சுனில் சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் நடிகை பிரியங்காவிடம் பணம் கேட்டும் சுனில் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன பிரியங்கா, சுனில் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்ததால் ஆத்திரமடைந்த பிரியங்கா, சுனிலை கொலை செய்ய தனது தாய் நாகம்மாவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். பின்னர் மனு, சிவராஜிடம் பணத்தை கொடுத்து சுனிலை கொலை செய்யும்படி தாயும், மகளும் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து, அவர்கள் 2 பேரும் சேர்ந்து தோட்டத்து வீட்டில் தூங்கிய சுனிலை ஆயுதங்களால் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைதான 4 பேர் மீதும் சென்னப்பட்டணா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். ரவுடி கொலையில் நடிகை கைதான சம்பவம் ராமநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்