தாளவாடி,
தாளவாடி அருகே உள்ளது தொட்டகாஜனூர் கிராமம். இங்கு உள்ள தோட்டத்து சாலை பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஆழ்குழாய் நீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு மழை இல்லாததால் நிலத்தடிநீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. மழை காலங்களில் இங்கு உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். ஆனால் இந்த மழைநீர் அனைத்தும் வீணாக கர்நாடக மாநிலம் சிக்கொலா அனணக்கு சென்று கலந்து விடுகிறது.
இது பற்றி அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைத்து தான் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் விவசாயம் செய்ய முடியாமல் அவதிப்பட்டு வந்தோம். மழைக்காலங்களில் பெய்யும் மழையை தடுத்து தடுப்பணைகள் கட்டினால் அதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயருவதுடன், விவசாய பணிகளும் தொடர்ந்து நடைபெறும்.
எனவே தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள காட்டாற்றின் குறுக்கே 3 பெரிய தடுப்பணைகள் கட்டித்தர வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். இதுசம்பந்தமாக கடந்த மாதம் கூட முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் பொதுப்பணித்துறை, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு மனு அனுப்பி இருக்கிறோம். எங்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று தொட்டகாஜனூர் பகுதியில் உள்ள காட்டாற்றில் 3 பெரிய தடுப்பணைகள் கட்டி வீணாகும் மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நிலத்தடிநீர் மட்டும் உயரும். விவசாயம் செய்ய முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.