திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள புறநோயாளிகள் பிரிவு பகுதிக்கு சென்ற அவர், அங்குள்ள நோயாளிகளிடம் உடல்நலம் குறித்தும், மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார். பின்னர் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்வையிட்டார்.
அப்போது மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், குடும்பநலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.எஸ்.குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணராஜ், சூப்பிரண்டு சேகர், காசநோய் துணை இயக்குனர் டாக்டர் லட்சுமிமுரளி, திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
பின்னர் திருவள்ளூரை அடுத்த வெங்கத்தூர் ஊராட்சி மணவாளநகர் காந்தி தெருவுக்கு சென்ற சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அங்கு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள பாலகிருஷ்ணன் என்பவரது வீடு, டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுகாதாரமின்றி சீர்கேடாக காணப்பட்டது. இதைத்தொடர்ந்து வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது அவரை உள்ளே வரவிடாமல் அச்சுறுத்தும் வகையில் பாலகிருஷ்ணன் செயல்பட்டதாக தெரிகிறது.
இதேபோல ஒரு முறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தபோது அவர் அவ்வாறு அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணனின் மற்றொரு வீட்டில் ஆய்வு செய்தபோது வீடு முழுவதும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து பொது சுகாதாரம் விதி 1939-ன்படி, டெங்கு கொசு உருவாக காரணமாக இருந்த பாலகிருஷ்ணனுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் அந்த வீட்டிற்கு வருவாய்த்துறை மூலம் சீல் வைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அரசு பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாலகிருஷ்ணன் மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.