மாவட்ட செய்திகள்

திருவேங்கடம் அருகே பயங்கரம்: விவசாயி குத்திக்கொலை மருமகன் கைது

திருவேங்கடம் அருகே விவசாயி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மருமகனை போலீசார் கைது செய்தனர்.

திருவேங்கடம்,

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகே உள்ள மைப்பாறை கீழ காலனியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 60) விவசாயி. இவருடைய மனைவி விஜயா. இவர்களுடைய மகள் சங்கீதா (20). இவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்தார்.

அப்போது சங்கீதாவுக்கும், கரூர் மாவட்டம் செய்யாநத்தம் தாலுகா புலவாய்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்வகுமாருக்கும் (23) இடையே முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. செல்வகுமார் கூலி வேலை செய்தார்.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் 2 பேரும் குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, கலப்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள், புலவாய்பட்டியில் வசித்தனர். தொடர்ந்து சங்கீதா கர்ப்பம் அடைந்தார்.

பின்னர் சங்கீதாவின் பெற்றோர், உறவினர்களுடன் புலவாய்பட்டிக்கு சென்று, சங்கீதாவுக்கு வளைகாப்பு விழா நடத்தினர். பின்னர் அவரை மைப்பாறையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு அழைத்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சங்கீதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து செல்வகுமார் தன்னுடைய மனைவி, குழந்தையை பார்ப்பதற்காக மைப்பாறைக்கு வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக, செல்வகுமாரால் தனது ஊருக்கு திரும்பி செல்ல முடியவில்லை. எனவே அவர் தனது மாமனாரின் வீட்டிலேயே இருந்தார். மேலும் செல்வகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் செல்வகுமார் மாமனாரின் வீட்டில் இருந்த ரேடியோவை கத்தியால் கழட்டி, பழுது நீக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யனார், செல்வகுமாரிடம் ஏதாவது வேலைக்கு செல்லுங்கள். அல்லது தனிக்குடித்தனம் செல்லுங்கள் என்று கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த செல்வகுமார் கத்தியால் அய்யனாரை சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கமலாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட அய்யனாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வகுமாரை கைது செய்தனர். மாமனாரை மருமகன் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்