மாவட்ட செய்திகள்

திட்டக்குடி அருகே பரபரப்பு, குடிநீர் கேட்டு சுடுகாட்டில் கிராம மக்கள் தர்ணா

திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு சுடுகாட்டில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

திட்டக்குடி,

திட்டக்குடி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய பகுதியில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக குடிநீர் கேட்டு வீதியில் கிராம மக்கள் காலி குடங்களுடன் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் திட்டக்குடி அருகே குடிநீர் கேட்டு நேற்று சுடுகாட்டில் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் விவரம் வருமாறு:-

திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணறுடன் கூடிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடும் வறட்சி காரணமாக நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் அங்கு அமைக்கப்பட்டிருந்த ஆழ்துளை கிணறு வறண்டது.

இதனால் ஆழ்துளை கிணற்றில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்க முடியவில்லை. இதையடுத்து குடிநீருக்காக அருகில் உள்ள விவசாய கிணறுகளுக்கும், கிராம புறங்களுக்கும் சென்று தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.

தண்ணீருக்காக அதிக தூரம் நடந்து செல்ல வேண்டி இருப்பதால், அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்த பின்பும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று வெலிங்டன் நீர்த்தேக்க பாசன பகுதி சிறு, குறு விவசாயிகள் சங்க தலைவர் தயா பேரின்பம் தலைமையில் அங்குள்ள சுடுகாட்டில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள், புதிய ஆழ்துளை கிணறு அமைத்து தட்டுப்பாடின்றி தங்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி அங்கு காலி குடங்களுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சங்க பொருளாளர் பாண்டுரங்கன், கிளை நிர்வாகிகள் குருசாமி, கலியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இது குறித்த தகவலின் பேரில் நல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எலிசபெத்மேரி, விஜயராகவன், திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதனை ஏற்று கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்