மாவட்ட செய்திகள்

திண்டிவனம் அருகே: பஸ் கவிழ்ந்து அண்ணன்-தம்பி பலி - சபரிமலைக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

திண்டிவனம் அருகே சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் அண்ணன்-தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மயிலம்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மதனமேடு பகுதியை சேர்ந்தவர் தசரய்யா(வயது 66). அய்யப்ப பக்தரும் குருசாமியுமான இவர் தனது தம்பி ராமகிருஷ்ணன்(62) மற்றும் அதேபகுதியை சேர்ந்த முனிகிருஷ்ணன்(30), குருவப்பா(40) உள்பட 39 பேருடன் ஒரு பஸ்சில் கடந்த 8-ந்தேதி சபரிமலைக்கு சென்றார். பின்னர் அவர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்து விட்டு நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். பஸ்சை சித்தூரை சேர்ந்த பாபு என்பவர் ஓட்டினார். மாற்று டிரைவராக முருகன் என்பவர் உடன் வந்தார். அந்த பஸ் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன்பகுதியில் அமர்ந்திருந்த தசரய்யா, அவரது தம்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பஸ்சுக்குள் சிக்கி பலத்த காயமடைந்த 39 பேரும் தங்களை காப்பாற்றக்கோரி கூச்சலிட்டனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுபற்றி மயிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்-இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விபத்தில் படுகாயமடைந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் டிரைவர்கள் உள்பட 39 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதற்கிடையே போலீசார், விபத்தில் பலியான தசரய்யா, ராமகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சபரிமலைக்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் அண்ணன்-தம்பி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை