உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள போத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது வலையபட்டி. இந்த கிராமத்திற்கு கடந்த 8 நாட்களாக கூட்டுக்குடி நீர் வினியோகம் நிறுத்தப்பட்டு விட்டது. இதே போல் இந்தப் பகுதியில் உள்ள பண்ணைப்பட்டி, வில்லாணி, பெருமாள்பட்டி, நல்லுத்தேவன்பட்டி, போத்தம்பட்டி கிராமங்களிலும் கூட்டுக்குடிநீர் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மேற்கண்ட கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த தவிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் வலையபட்டி கிராமமக்கள் உசிலம்பட்டி-பேரையூர் சாலை வலையபட்டி பஸ் நிறுத்தத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி யூனியன் ஆணையாளர் பாலகிருஷ்ணன், பொறியாளர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் முனீஸ்வரன், கிராம நிர்வாக அதிகாரி வாசுமுத்து மற்றும் போலீசார் கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, தனி நபர்கள் உரிய அனுமதி பெறாமல் கிராமமக்களின் பயன்பாட்டுக்கான கூட்டுக் குடிநீர் குழாயில் திருட்டுத்தனமாக குழாயை இணைத்து குடிநீர் எடுக்கின்றனர், இதனால் ஒட்டு மொத்த பொதுமக்களுக்கும் குடிநீர் கிடைக்காத நிலை ஏற்பட்டு விடுகிறது என்று பொதுமக்கள் அதிகாரிகளிடம் குற்றம் சாட்டினர்.
அப்போது, கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீபாவளி வரை தடையின்றி கூட்டுக் குடிநீரை வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் பின்பு கூட்டுகுடிநீர் குழாயில் குழாயை இணைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் யூனியன் ஆணையாளர் பாலகிருஷ்ணன் கிராமமக்களிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.