புதூர்
மதுரையில் கள்ளழகர் எழுந்தருளிய மண்டகப்படியில் ஓடுகள் உடைந்து விழுந்ததால் 5 போலீசார் உள்பட 9 பேர் காயம் அடைந்தனர்.
மண்டகப்படியில்....
மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழாவில் கடந்த 16-ந் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் பூப்பல்லக்கில் கள்ளர் திருக்கோலத்தில் எழுந்தருளிய கள்ளழகரை பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பல்லக்கில் எழுந்தருளி அழகர்மலைக்கு கள்ளழகர் புறப்பட்டார். அப்போது பக்தர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர்.
அப்போது புதூர் உத்தப்பநாராயண சுவாமி கோவிலில் கள்ளழகர் எழுந்தருளினார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு மருதங்குளம் பகுதி மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் தரிசனம் செய்த பின்னர் கள்ளழகர் அங்கிருந்து புறப்படும்போது மண்டகப்படியில் அமைக்கப்பட்டு இருந்த ஓடுகள் திடீரென சரிந்து விழுந்தன.
9 பேர் காயம்
இதில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 5 போலீஸ்காரர்கள் சத்தியமூர்த்தி(வயது 24), முருகானந்தம்(52), கருப்பசாமி(29), முத்துலிங்கம், இசக்கிமுத்து(25) ஆகியோரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது. மலும் பட்டர்கள் அழகர், சாரதி, சீர்பாதம் சரவணகுமார், கோவில் பணியாளர் நித்யானந்தம் என 9 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் மதுரை பாலீஸ் கமிஷனர் செந்தில்குமார் காயம் அடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.