பனப்பாக்கம்,
ஓச்சேரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய அவருடைய பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக மாப்பிள்ளை பார்த்து கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 26-ந் தேதி ஓச்சேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
திருமண வயது நிரம்பாத 14 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பது குறித்து வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரி சாந்திக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் சென்று திருமண வயது நிரம்பாத பெண்ணுக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். எனவே, திருமணம் செய்யக்கூடாது என்று விளக்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.
மேலும் சிறுமியின் பெற்றோர் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரை வேலூரில் உள்ள சமூகநல அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் கூறியதுபோன்று இருவீட்டாரும், சமூகநல அலுவலகத்திற்கு செல்லாமல் இருந்துள்ளனர். அதைத்தொடர்ந்து சமூகநல அலுவலர் சாந்தி இதுபற்றி அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் பெண்ணின் பெற்றோர், மணமகன், அவருடைய பெற்றோர் மற்றும் திருமண மண்டப உரிமையாளர் ஆகிய 6 பேர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.