தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவர் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அதன்படி நேற்று காரியவிடுதி, அக்கரைவட்டம், கல்விராயன்விடுதி, உஞ்சையவிடுதி, ஊரணிபுரம், சிவவிடுதி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்தார்.
அப்போது செல்லும் இடங்களில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண்களும் திரண்டு வந்து ஆரத்தி எடுத்தனர். அப்போது பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அப்போது வேட்பாளர் வைத்திலிங்கம் பேசியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் நல் ஆசியோடு, காரியாவிடுதியில் உங்களை சந்தித்து அதிக வாக்குகளை எனக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டு வந்துள்ளேன். ஜெயலலிதா ஏழை, எளிய மக்கள், மாணவ, மாணவிகள், பெண்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தினார்.
விவசாய கடன் 12,140 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஜெயலலிதா எப்படி மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் கொடுத்தாரோ அதே போன்று இலவசமாக வாஷிங்மெஷின் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதே போன்று ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும்.ரேஷன் பொருட்கள் ஒவ்வொருவரின் வீடு தேடி வந்து வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு இலவசமாக வழங்கப்படும். ஒரத்தநாடு தொகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு தேர்வுகளுக்குசெல்லும் வகையில் இலவச பயிற்சி மையத்தை அமைப்போன். அதே போல் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சிப்காட் தொழிற்பேட்டையையும் அமைப்பேன், என்றார்.
வேட்பாளருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.