சேலம்,
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள கேரள மக்களின் துயரை துடைக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. சேலத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.
சேலத்தில் உள்ள பாவேந்தர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு உதவி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் கல்லூரியில் நடந்தது. இதில் கல்வி நிறுவனங்களின் தலைவர் பழனியப்பன் செயலாளர் மண்மணி, பொருளாளர் சுப்பிரமணியம், துணை முதல்வர் ஹேமலதா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்லூரியின் முதன்மையர் பேராசிரியர் சுரேஷ் பேசும்போது, கேரள மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பிற்கு நம்மால் முடிந்த சிறு உதவிகளை செய்து உதவிக்கரம் நீட்டுவோம். மேலும் மக்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் குடிநீர், அத்தியாவசிய பொருட்களை பெரியார் பல்கலைக்கழக நாட்டுநலப்பணி த்திட்ட அலுவலகத்திற்கு கல்லூரி சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார். முடிவில் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ் நன்றி கூறினார்.
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளான வெங்கனாச்சேரி, திருச்சூரில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் கிளாத் ரீடெய்ல் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் ரூ.30 லட்சத்திற்கு ஆடைகளும், ரூ.5 லட்சத்திற்கு ஒரு குடும்பத்திற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வழங்கப்பட்டன. இந்த தகவலை சேலம் கிளாத் ரீடெய்ல் சங்க தலைவர் ஊர்வசி சீனிவாச குப்தா தெரிவித்தார். அப்போது, செயலாளர் சுந்தர்குமார், துணை பொருளாளர் சுப்பிரமணி, துணை செயலாளர் குமாரவேல், உறுப்பினர்கள் சரவணன், ராஜகணேசன், சுந்தர்ராஜன், இளங்கோவன், துளசிதாஸ், ஜெகநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.
வாழப்பாடியில், அரிமா சங்கங்கள், சரஸ்வதி மெட்ரிக் பள்ளி, உதயா மருத்துவமனை, நெஸ்ட் அறக்கட்டளை, வாசவி கிளப், வனிதா கிளப், ஆப்பிள் இளைஞர் கூட்டமைப்பு, அனைத்து வணிகர்கள் சங்கங்கள், வாழை பசுமை இயக்கம், கமலாலயம் காப்பகம், வாகன ஓட்டுனர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தன்னார்வ அமைப்புகள் ஒன்றிணைந்து, பஸ் நிலையம் அருகே முகாம் அமைத்து, கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை சேகரித்தனர்.
முகாமில், பொதுமக்கள், தொழில் அதிபர்கள், மாணவ-மாணவிகள், வணிகர்கள், தன்னார்வ அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் ரூ.1 லட்சம், 200 சிப்பம் அரிசி, கோதுமை, பிஸ்கட் பொருட்கள், நாப்கின், மளிகை பொருட்கள், துணி வகைகள், பாய், போர்வை, ரெடிமேட் ஆடைகள் என மொத்தம் 7 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் குவிந்தன.
மேலும், முகாமில் பெறப்பட்ட ரூ.1.50 லட்சத்தை வங்கி காசோலையாக கேரள மாநில முதல்-மந்திரியின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கிடவும், சேகரிக்கப்பட்ட பொருட்களை வாகனங்களில் எடுத்து சென்று கோட்டயம் அருகே அமைக்கப்பட்டுள்ள அரசு முகாமில் வழங்கிடவும் தன்னார்வ அமைப்புகள் ஏற்பாடு செய்து இருந்தன.
சேலம் மாவட்ட அனைத்து மிக்சர், முறுக்கு, சிப்ஸ், காரவகைகள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அரிசி, பிஸ்கட், குழந்தைகளுக்கு துணிகள் அடங்கிய பொருட்கள் சரக்கு வாகனத்தில் கேரள மாநிலம் மலப்புரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் நிவாரண பொருட்கள் விவரங்கள் அடங்கிய காகிதத்தை மலப்புரம் மாவட்ட கலெக்டர் அமித் மீனாவிடம் அவர்கள் ஒப்படைத்தனர்.