தேனி,
நாடு முழுவதும் சுதந்திர தின விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தேனி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், சுதந்திர தின விழா தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி, தேசிய கொடியேற்றினார்.
பின்னர் கலெக்டர் பல்லவி பல்தேவ், போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் ஆகியோர் திறந்த ஜீப்பில் பயணித்தபடி போலீசார், ஊர்க்காவல் படையினர், தீயணைப்பு படையினர், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். அதன்பிறகு அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டனர்.
இதனையடுத்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு கலெக்டர், கதர் ஆடை வழங்கி கவுரவித்தார். மேலும் அரசின் பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.27 லட்சத்து 81 ஆயிரத்து 195 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
அரசின் பல்வேறு துறைகளிலும் சிறப்பாக பணியாற்றிய 119 பேருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை கலெக்டர் வழங்கி பாராட்டினார். பின்னர், மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நாட்டுப்பற்று, தேச ஒற்றுமையை விளக்கும் வகையிலும், மரங்களை பாதுகாத்தல், இயற்கை வளங்களை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. இவை பார்வையாளர்களை கவர்ந்தன.
இதுமட்டுமின்றி சிலம்பாட்ட வீரர், வீராங்கனைகள், ஜூடோ வீரர், வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகளும், மாணவ, மாணவிகளின் யோகா நிகழ்ச்சியும் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
இந்த விழாவில் மாவட்ட வன அலுவலர் கவுதம், மேகமலை வன உயிரின காப்பாளர் சச்சின் போஸ்லின் துக்காரம், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். விழா அரங்கை சுற்றிலும் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.