திருவிடைமருதூர்,
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் கச்சா எண்ணெய்யை எடுத்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர், விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி கதிராமங்கலத்தில் எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதனால் அச்சம் அடைந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தடியடி
அப்போது எண்ணெய் குழாய் உடைப்பு ஏற்பட்டிருந்த பகுதியில் போடப்பட்டிருந்த முள்செடிகளில் மர்ம நபர்கள் தீவைத்தனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்களை சந்திக்க காவிரி உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் காலை கதிராமங்கலத்துக்கு சென்றனர். அப்போது அவர்களை கதிராமங்கலத்துக்குள் நுழைய தடை விதித்த போலீசார் பெ.மணியரசன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதைப்போல மாலையில் கதிராமங்கலம் கிராமத்துக் குள் செல்ல முயன்ற வெல்பர்பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பு மற்றும் தமிழ்தேசிய விடுதலை இயக்கத்தை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடையடைப்பு
ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்தும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் கதிராமங்கலத்தில் நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கதிராமங்கலத்தின் அனைத்து எல்லை பகுதிகள், தெருக்கள், ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாய் கசிவு ஏற்பட்ட பகுதிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கதிராமங்கலத்தில் நேற்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீண்டும் மக்கள் போராட்டம் நடத்த கூடாது என்பதற்காக கதிராமங்கலத்தை சுற்றிலும் 20 இடங்களில் தஞ்சை,நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ம.தி.மு.க.வினர் கைது
மேலும், ஓ.என்.ஜி.சி. ஆழ்துளை கிணறு உள்ள 11 இடங்களிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. கும்பகோணம் -மயிலாடுதுறை சாலையில் செல்லும் பஸ்களில் கதிராமங்கலத்துக்கு செல்ல ஒரு பயணி கூட ஏறவில்லை. மாறாக போலீசார் தான் பஸ்களில் வருவதும் செல்வதுமாக இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.
இதற்கிடையில் கதிராமங்கலத்தில் மக்களை சந்திக்க ம.தி.மு.க. மாநில விவசாய பிரிவு செயலாளர் ஆடுதுறை முருகன் தலைமையில் 30 பேர் வந்தனர். அவர்களை சிவ ராமபுரம் பஸ் நிறுத்தத்தில் போலீசார் மறித்து கதிராமங்கலத்துக்குள் செல்ல அனுமதியில்லை என கூறி அவர்களை கைது செய்தனர்.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேற்று மாலை கதிராமங்கலத்தில் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்ட வயல் பகுதியை பார்வையிட்டார். இதை தொடர்ந்து கிராமத்தில் ஒவ்வொரு வீடாக சென்று குடிநீர் எவ்வாறு உள்ளது என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஒரு வீட்டில் குடிநீரை வாங்கி குடித்து பார்த்தார்.பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில்:- கதிராமங்கலத்தில் குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவிய வயல் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் பரவிய வயலுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். அந்த வயலை ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் சீரமைத்து தரும் என உறுதி அளிக்கிறேன்.
இந்த கிராமத்தில் 11 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் 2 இடங்களில் புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அச்சத்தை தரக் கூடிய வகையில் இங்கு யாரும் இல்லை. மக்களுக்கான பாதுகாப்பு பணியில் தான் போலீசார் ஈடுபட்டுள்ளனர். போலீசார் யாரையும் அச்சுறுத்தவில்லை. பொதுமக்களிடம் பேசுவதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது. ஓரிரு தினங்களில் மக்களிடம் கலந்தாலோசித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தநிலையில் நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் தெஹலான் பாகவி தலைமையில் கதிராமங்கலத்துக்கு வந்த 40 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.