மாவட்ட செய்திகள்

“கடின உழைப்பின் மூலமே வெற்றியை எட்ட முடியும்” சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பேச்சு

கடின உழைப்பின் மூலமே வெற்றியை எட்ட முடியும் என்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா கூறினார்.

தினத்தந்தி

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் மேலாண்மை, அறிவியல் மற்றும் கல்வியியல் மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. விழாவில் கலை மற்றும் மேலாண்மை புலத்தைச் சேர்ந்த 482 மாணவ-மாணவிகளுக்கும், அறிவியல் மற்றும் கல்வியியல் புலத்தைச் சேர்ந்த 657 மாணவ-மாணவிகளுக்கும் பல்கலைக்கழக துணை வேந்தர் சுப்பையா பட்டங்களை வழங்கினார். முன்னதாக விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.விமலா கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

வள்ளல் அழகப்பரின் வள்ளல் தன்மையையும், அவருடைய தொலைநோக்கு பார்வையையும் நனவாக்கும் வகையில் அழகப்பா பல்கலைக்கழகம் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனமாக திகழ்கிறது. இந்தியா பண்டைய காலத்தில் இருந்து உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நாளந்தா பல்கலைக்கழகம். பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக தற்போது நாட்டில் 864 பல்கலைக்கழகங்களும், 40 ஆயிரம் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு நல்ல பண்புகளும், ஒழுக்கமும் உள்ள குடிமக்கள் இருப்பது அவசியம். கல்வியின் நோக்கம் நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் குடிமக்களை உருவாக்குவதே ஆகும். வெற்றி என்பது தானாக வராது. கடின உழைப்பின் மூலமே வெற்றியை எட்டமுடியும். விடா முயற்சி நிச்சயம் வெற்றிக்கு வித்திடும். மாறி வருகின்ற சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது தங்களுடைய அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் மிசோரம் பல்கலைக்கழக துணை வேந்தர் சாம்பசிவராவ் உரையாற்றினார். அவர் கூறுகையில், இன்றைய நவீன உலகில் புதுமையான சிந்தனைகளையும், கருத்துகளையும் கொண்ட நிபுணர்களையும், அறிஞர்களையும் உருவாக்குவதில் இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகம் முழுவதும் கல்வி துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களில் 20 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். மாணவர்கள் தங்களது கனவை நனவாக்குவதற்கு, மனதுக்கு பிடித்தவற்றை மிகுந்த ஆசையுடனும், குறிக்கோளுடனும் செய்து வாழக்கையில் வெற்றியடைய வேண்டும் என்றார்.

விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ் பிரபு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் சுபாஷ் சந்திரபோஸ், ராமசாமி, நாராயணமூர்த்தி, ஜெயகாந்தன், குருநாதன் தேர்வாணையர் சக்திவேல் மற்றும் மாணவர்களின் பெற்றோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்