கயத்தாறு,
கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ரூ.15 லட்சம் செலவில் புதுப்பித்து கட்டப்பட்டு நவீன மயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன மயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார். பின்னர் அவர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 504 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 10 லட்சத்து 8 ஆயிரம் செலவில் கடன் உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து அவர், கயத்தாறு அருகே வில்லிசேரியில் ரூ.24 லட்சத்து 28 ஆயிரம் செலவில் புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தில் கிருஷ்ணா நகர் ஊருணி, இடைசெவல் வடக்கு ஊருணி, உப்பு ஊருணி ஆகியவற்றை தூர்வாரும் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர், கோவில்பட்டியை அடுத்த நாலாட்டின்புத்தூரில் ரூ.20 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கியை திறந்து வைத்தார். தொடர்ந்து அங்கு 39 பயனாளிகளுக்கு ரூ.31 லட்சம் கடன் உதவிகளை வழங்கினார்.
தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.17 லட்சம் செலவில் இனாம் மணியாச்சி, பாண்டவர்மங்கலம், திட்டங்குளம், மந்திதோப்பு பஞ்சாயத்து பகுதிகளுக்கு சீவலப்பேரி குடிநீர் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினார்.
பின்னர் கோவில்பட்டி நகரசபை அலுவலகத்தில் புதிய குடிநீர் திட்ட பணிகள் தொடர்பாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா, குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர்கள் செந்தூர்பாண்டி, விசுவலிங்கம், பாலசுப்பிரமணியன், மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான், நகரசபை ஆணையாளர் ராஜாராம், என்ஜினீயர் கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அனிதா,
மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர்கள் சந்திரசேகர், பிரியா குருராஜ், கோவில்பட்டி யூனியன் தலைவி கஸ்தூரி சுப்புராஜ், யூனியன் துணை தலைவர் பழனிசாமி, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், அ.தி.மு.க. நகர செயலாளர்கள் விஜய பாண்டியன், கப்பல் ராமசாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், வினோபாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், கோவில்பட்டியில் 19 ஆயிரத்து 50 குடிநீர் இணைப்புகள் உள்ளன. தற்போது புதிதாக 8 ஆயிரத்து 686 குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகிறது. இந்த மாத (ஜூன்) இறுதிக்குள் அனைத்து குடிநீர் இணைப்புகளும் வழங்கப்பட்டு விடும்.
கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 5 யூனியன்களில் உள்ள 248 கிராமங்களுக்கு ரூ.94 கோடி செலவில் சீவலப்பேரி குடிநீர் வழங்கும் திட்டம் வருகிற அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும். தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இந்த குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என்றார்.