நாகர்கோவில்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஜூன் மாதம் தொடங்கியது. கொரோனா தொற்று அதிகரித்ததால் மீண்டும் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி முதல் 8-ம் கட்ட ஊரடங்கை அரசு அமல்படுத்தியது. இதில் பஸ் போக்குவரத்துக்கு சில தளர்வுகள் அளித்தது. அதாவது, மாவட்டத்துக்குள் 1-ந் தேதி முதலும், மாவட்டத்திற்கிடையே 7-ந் தேதி முதலும் பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்தது.
அதன்படி குமரி மாவட்டத்தில் உள்ள 12 அரசு பணிமனைகளில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகின்றன. கொரோனா காரணமாக குறைந்தளவு பஸ்களே இயக்கப்படுகிறது. முதல் நாளில் 256 பஸ்களும், 2-வது நாளில் 276 பஸ்களும், நேற்று 278 பஸ்களும் இயக்கப்பட்டன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோர் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. முதல் 2 நாட்களில் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், கடந்த 2 நாட்களை காட்டிலும் நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இயக்கப்பட்ட அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் நேற்று ஒரே நாளில் ரூ.17 லட்சம் வசூலாகி உள்ளது. இதன்மூலம் கடந்த 2 நாட்களை விட போக்குவரத்துக்கழகத்திற்கு வருவாய் அதிகரித்துள்ளது. முதல் நாளில் ரூ.9 லட்சமும், நேற்று முன்தினம் ரூ.12 லட்சமும் வசூலானது குறிப்பிடத்தக்கது.
தற்போது பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, படிப்படியாக பழைய நிலைக்கு வருவாய் வசூல் திரும்பும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.