அன்னவாசல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து அடைமழை பெய்தது. இதனால், ஏரிகள், குளங்கள், கிணறுகள் உள்பட நீர்நிலைகள் நிரம்பின. வறட்சி மாவட்டமான புதுக்கோட்டைக்கு இந்த மழை மகிழ்ச்சியை கொடுத்தாலும் பருவம் தவறிய தொடர் மழையால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கின. ஏற்கனவே, கொரோனாவால் 6 மாதங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள் இந்த தொடர் மழையால் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
அன்னவாசல் பகுதியில் கடந்த ஒருவார காலமாக பெய்த தொடர் மழையால் மலைக்குடிப்பட்டி, இலுப்பூர், வீரப்பட்டி, முக்கண்ணாமலைப்பட்டி, பரம்பூர், குடுமியான்மலை, வயலோகம், அன்னவாசல், சித்தன்னவாசல், கீழக்குறிச்சி, புதூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடை செய்யப்பட்ட நெற்கதிர்களும் முளைத்து வீணாகி விட்டதாக இப்பகுதி விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
அரிமளம்
ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட அரிமளம் ஒன்றியம் இரும்பாநாடு ஊராட்சி பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழையால் விளைந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. ஏம்பல், திருவாக்குடி, மதகம், குறுங்களூர் ஆகிய ஊராட்சி பகுதிகளிலும் மழையால் விவசாய நிலங்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன.
காரையூர்
பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலத்தானியம், ஒலியமங்கலம், எம்.உசிலம்பட்டி, சூரப்பட்டி, கீழத்தானியம், சடையம்பட்டி, மறவாமதுரை, நல்லூர், அரசமலை, காரையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த நெற்கதிர்கள் கீழே சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளன.
கீரமங்கலம்
கீரமங்கலம் பகுதியில் தொடர் மழை காரணமாக நன்றாக விளைந்துள்ள நெல் கதிர்கள் வயலில் சாய்ந்து கிடக்கிறது. அதே போல கடலை, மிளகாய், உளுந்து உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் தண்ணீரில் மூழ்கி நாசமாகி வருகிறது. கீரமங்கலம் வடக்கு மற்றும் செரியலூர் கிராமத்தில் விவசாயி பன்னீர் என்பவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கம்பு கதிர்கள் செடியிலேயே வீணாகி விட்டது.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களான மட்டையன்பட்டி, வெள்ளவெட்டான்விடுதி, மங்களத்துப்பட்டி, பெருங்களூர், கூத்தாச்சிப்பட்டி, சோத்துப்பாழை, வளவம்பட்டி, தொண்டைமான்ஊரணி போன்ற பல்வேறு கிராமங்களில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
விவசாயிகள் ஏக்கர் ஒன்றிற்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்து சம்பா சாகுபடி பணியினை மேற்கொண்ட நிலையில் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. ஆகவே தமிழக அரசு ஏக்கர் ஒன்றிற்கு குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆலங்குடி
ஆலங்குடி வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி கிடக்கிறது. சில இடங்களில் நெற்கதிர்கள் மீண்டும் முளைத்து விட்டன.