பரமக்குடி தனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.வேட்பாளர் செ.முருகேசன் பரமக்குடி நகர் பகுதியில் உள்ள வியாபாரிகள் சங்கம், மருத்துவர்கள் சங்கம், நெசவாளர்கள் கூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகளையும், கமுதி ஒன்றியத்தில் முக்கிய நிர்வாகிகளையும் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மேலும் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜகண்ணப்பனை சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். பின்பு நயினார்கோவில் ஒன்றிய தி.மு.க. ஊழியர் கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது, நயினார்கோவில் ஒன்றியத்தில் தி.மு.க. ஆட்சி காலத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
சமத்துவபுரம் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி கூட்டுக் குடிநீர் செயல்படுத்தப்பட்டுள்ளது. மண் சாலைகள் அனைத்தும் தார் சாலைகளாக உயர்த்தப்பட்டது. தெரு விளக்குகள் அமைத்தல், சாலை அமைத்தல் உள்பட பல்வேறு திட்டப் பணிகள் நடந்துள்ளன. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். நயினார்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அனைத்து வசதிகளுடன் தரம் உயர்த்தப்படும். நயினார் கோவில் சுற்றுலா தளமாக மேம்படுத்தப்படும். நயினார்கோவில் ஊருணியை பக்தர்கள் நீராடும் வகையில் தூய்மைப்படுத்தி கரைகள் மேம்படுத்தப்படும். அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். பரமக்குடி தொகுதி மக்களின் கனவை நிறைவேற்ற தி.மு.க.வுக்கு வாக்கு அளியுங்கள் என உறுதி அளித்என கேட்டுக் கொண்டார். அவருடன் நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சக்தி, ஒன்றிய பொறுப்பாளர் அண்ணாமலை, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் குமரகுரு, ஒன்றிய கவுன்சிலர் நாகநாதன், தொ.மு.ச. நிர்வாகி அரசுமணி, கொட்டகுடி வளவன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.