பழனி:
தமிழ்ப்புத்தாண்டு நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று மக்கள் தங்கள் வீடுகளில் அவல், பொரி, தேங்காய் போன்ற பூஜை பொருட்கள் மற்றும் பழங்களை வைத்து வழிபாடு செய்வது வழக்கம். மேலும் பழனி முருகன் கோவில் மற்றும் தங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
தமிழ்புத்தாண்டையொட்டி, பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்கள் பூஜை பொருட்கள், பழங்கள் வாங்க காந்தி மார்க்கெட்டில் குவிந்தனர். இதில் பெரும்பாலான மக்கள் தங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை மார்க்கெட் சாலையோரத்தில் நிறுத்தினர். அதேபோல் மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட்களை இறங்குவதற்காக வந்த லாரி, சரக்கு வேன்கள் போன்றவையும் காந்திரோட்டில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் காந்திரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பழனி பஸ்நிலைய பகுதியில் இருந்து கடைவீதி, பழைய தாராபுரம் சாலைக்கு செல்லும் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, காந்திரோட்டில் பகல் வேளையில் கனரக வாகனங்கள் வந்து செல்வதாலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே பகலில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். மேலும் சாலையோர ஆக்கிரமிப்பையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.