கிருஷ்ணகிரி,
தமிழக அரசு சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்களுக்கு விலையில்லா பூஜை பொருட்கள் வழங்கும் விழா கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். பர்கூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இந்து சமய அறநிலைய துறை துணை ஆணையர் நித்யா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
கடந்த 2016-17 -ம் ஆண்டில் தமிழகத்தில் உள்ள கிராமப்புற கோவில்களுக்கு இலவசமாக பூஜை பொருட்கள் வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் கிராமப்புற கோவில்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கப்படுகிறது.
183 கோவில்களுக்கு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 183 கோவில்களுக்கு தலா 2 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள பூஜை பொருட்கள் 4 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மட்டுமே கோவில் பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி, பழுதடைந்த கோவில்களை புனரமைக்க 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் கோவில்களில் அன்னதான திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் தென்னரசு, தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கேசவன், கிருஷ்ணகிரி முன்னாள் நகர் மன்ற தலைவர் தங்கமுத்து, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் மாதையன், செயல் அலுவலர்கள் ராஜரத்தினம், சித்ரா, ஆய்வாளர் பாண்டியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.