கம்பம்,
கம்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இடைத்தரகர்களின்றி நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய கம்பத்தில் உழவர்சந்தை தொடங்கப்பட்டது. இந்த உழவர்சந்தை விற்பனையிலும், காய்கறி வரத்திலும் தேனி மாவட்டத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.
கம்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கூடலூர், குள்ளப்பகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி ஆகிய கிராமங்களில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளைபொருளை கொண்டு வந்து உழவர்சந்தையில் விற்பனை செய்கின்றனர்.
இதுபோக சீசன் காலங்களில் விளைவிக்ககூடிய பழ வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் மாங்காய்களை விரைவாக பழுக்க வைக்க ரசாயன கற்கள் (கால்சியம் கார்பைடு) பயன்படுத்துகின்றனர். ரசாயன கற்கள் வைத்தால் 3 மணி முதல் 6 மணி நேரத்தில் மாங்காய்கள் பழுத்துவிடும். ஆனால் இந்த பழத்தை சாப்பிடுவதால் வயிற்று கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே கம்பம் உழவர் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ள மாம்பழங்கள் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து என உழவர்சந்தை நிர்வாக அதிகாரி சின்னவெளியப்பன் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அப்போது விவசாயிகளிடம் ரசாயன கற்கள் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் விற்பனை அட்டை ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர்.