கிருஷ்ணகிரி,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு மத்தூர் பஸ் நிலையத்தில் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக டாக்டர் ராமதாஸ் இன்று மதியம் கிருஷ்ணகிரிக்கு வருகிறார். தொடர்ந்து மாலை மத்தூர் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஓசூர் காமராஜ் நகரில் மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசுகிறார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருவதை முன்னிட்டு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க தொண்டர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இது குறித்து பா.ம.க. மாநில துணை பொதுச் செயலாளர் சுப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மத்தூர் மற்றும் ஓசூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர், கிளை பொறுப்பாளர்கள், பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம், உழவர் பேரியக்கம், சட்ட பாதுகாப்பு அணி, மகளிர் அணி, இளைஞர் சங்கம், இளம்பெண்கள் சங்கம், தமிழக மாணவர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.