பழனி:
பழனி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் வரதமாநதி அணை அமைந்துள்ளது. இங்கு சுற்று வட்டார பகுதி மக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பார்வையிட வருகின்றனர். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகம் இருக்கும். தற்போது சபரிமலை சீசன் என்பதால் பழனிக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் வரதமாநதி அணைக்கு சென்று வருகின்றனர்.
ஆனால் அணையில் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அங்கு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையை சேர்ந்த 3 வாலிபர்கள் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிக்கு சென்று செல்பி எடுத்தபோது அணையில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து பழனி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் அணையின் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் வகையில் அணை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அணையில் இறங்கி குளிக்ககூடாது, நீர்ப்பிடிப்பு பகுதிக்கு செல்லக்கூடாது என பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.