மாவட்ட செய்திகள்

‘அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை’ கமல்ஹாசன் பேட்டி

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன், அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை என்று கூறினார்.

கோவை

கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த கமல்ஹாசன், அரசியல் எங்கள் தொழில் அல்ல, கடமை என்று கூறினார்.

வேட்புமனு தாக்கல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை தெற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- ஜனநாயக கடமையை கட்சி தலைவனாக செய்யும் அரிய வாய்ப்பை தேர்தல் ஆணையம் கொடுத்து இருக்கிறது. இது நான் களம் இறங்கும் முதல் தேர்தல். என்னுடைய தேர்தல் வியூகம் நேர்மைதான்.

எங்களிடம் இருக்கும் இந்த நேர்மை மற்றவர்களிடம இருக்காது. எங்களின் திட்டத்தையும், செழுமையையும் நம்பியே களமிறங்கி இருக்கின்றோம்.

கோவை மனதுக்கு இனிய ஊர்களில் ஒன்று.

இங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கின்றனர். எனது இந்த ஏற்றத்திற்கு காரணமானவர்கள் இங்கு இருக்கின்றனர். அதனாலேயே இங்கு போட்டியிடுகிறேன். இங்கே மத நல்லிணக்கம் இல்லாமல் செய்ய முயற்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதற்கு எதிரான குரலாக நாங்கள் இருப்போம்.

முன்மாதிரி தொகுதியாக மாற்றுவோம்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோவை என்ற புகழ் மங்காமல் இருக்க பணிசெய்ய போகிறோம். கோவை தெற்கு தொகுதியில் பல பிரச்சினைகள் உள்ளன. குடிநீர், சாலை விரிவாக்க பிரச்சினை உள்ளது. இங்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

கோவை மண்டலத்திற்கு தேவையான விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரெயில் திட்டம் போன்றவை செய்யப்படாமல் இருக்கின்றது.

முன்மாதிரி தொகுதியாக இந்த தொகுதியை மாற்ற முடியும். வெளியூரை சேர்ந்தவர் என என்னை யாரும் சொல்ல மாட்டார்கள்.

நான் தமிழன், எனக்கு நண்பர்கள் உறவினர்கள் இங்கு இருக்கின்றனர். 234 தொகுதிகளிலும் நான் போட்டியிடுவதாகவே கருதுகிறார்கள். இனி கோவையை மையமாக வைத்து கொண்டு எனது பிரசாரம் இருக்கும்.

அரசியல் எங்களது கடமை

டாக்டர் பணி செய்தவர், தொடர்ந்து அந்த பணியை செய்வார். எங்களுக்கும் வேறு தொழில்கள் உள்ளன. அரசியல் எங்களுக்கு தொழில் அல்ல. அரசியல் எங்களின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் கமல்ஹாசன் நேற்று அந்த தொகுதிக்கு உட்பட்ட கோவை தேர்நிலைத்திடல் பகுதியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

கமல்ஹாசன் வேட்புமனுதாக்கல் செய்யும் தகவல் அறிந்ததும் அவரை பார்ப்பதற்காக கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் அமைந்த பகுதியில் கூட்டம் திரண்டது. உடனே போலீசார் தடுப்புகளை வைத்து கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்