மேலப்பாளையத்தில் உள்ள ஒரு வீட்டில் டோக்கன் வழங்கிய ரேஷன் கடை ஊழியர்; ரேஷன் கடையில் டோக்கன் வாங்குவதற்காக 
மாவட்ட செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் தொடங்கியது; ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

நெல்லை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வினியோகம் நேற்று தொடங்கியது. நெல்லையில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

பொங்கல் பரிசு தொகுப்பு

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,500 மற்றும் பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முந்திரி பருப்பு 20 கிராம், உலர் திராட்சை பழம் 20 கிராம், ஏலக்காய் 5 கிராம், முழுக்கரும்பு ஒன்று அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ரேஷன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க ரேஷன் கார்டுதாரர்கள் எந்த தேதியில், எத்தனை மணிக்கு ரேஷன் கடைக்கு வந்து பொருட்கள் வாங்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு வீடு, வீடாக டோக்கன் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வருகிறவர்கள் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

டோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த டோக்கன்களை ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் வருகிற 31-ந்தேதி வரை வீடு, வீடாக சென்று வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கன் வழங்கும் பணியை நேற்று தொடங்கினார்கள்.

நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 796 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளுக்கு உட்பட்டு 4 லட்சத்து 57 ஆயிரத்து 98 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. அதன்படி கடை ஊழியர்கள் தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணியை தொடங்கினார்கள். இதேபோல் அகதிகள் முகாமை சேர்ந்த 635 ரேஷன் கார்டுதாரர்களுக்கும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.

முற்றுகை

நெல்லை மாநகராட்சி பகுதியிலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி நடந்தது. இந்த நிலையில் நெல்லை வண்ணார்பேட்டை பகுதியை சேர்ந்த மக்கள் தங்களுக்கு டோக்கன் வழங்கவில்லை என கூறி ரேஷன் கடையை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் மாநகரில் மேலும் சில பகுதிகளில் டோக்கன் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு மக்கள் சென்றனர். ஆனால்,, கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

அரசு வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகம் செய்ய அறிவுறுத்தி உள்ளது. கொரோனா காலத்தில் இருந்தே டோக்கன் முறையில் பொருட்களை கொடுத்து வருகிறோம். இது எங்களுக்கு புதிதல்ல. டோக்கன் வழங்கும் பணி பெரும்பாலான பகுதிகளில் தொடங்கப்பட்டு உள்ளது. சில பகுதியில் தொடங்கவில்லை. அங்கு விரைவில் டோக்கன் வழங்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்