மாவட்ட செய்திகள்

உடலில் மண்எண்ணெய் ஊற்றி வியாபாரி தீக்குளித்து தற்கொலை பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

பவானி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், ரெயில் மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று சென்னை வந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தினார்கள். தங்களது வீடுகளிலும் கருப்பு கொடி ஏற்றியும், கருப்பு சட்டை அணிந்தும் எதிர்ப்பை தெரிவித்தார்கள். இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் பொம்மை வியாபாரி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதன் விவரம் வருமாறு:-

ஈரோடு அருகே உள்ள சித்தோடு சத்தி மெயின்ரோட்டில் வசித்து வந்தவர் தர்மலிங்கம் (வயது 24). திருமணம் ஆகாதவர். இவருடைய பெற்றோர் இறந்துவிட்டனர். இதனால் தனது பாட்டி ரத்தினாம்பாள் என்கிற சுப்புலட்சுமியின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். சுப்புலட்சுமிக்கு துணையாக அவருடைய உறவு பெண் ஒருவரும், அவருடன் வசித்து வந்தார்.

தர்மலிங்கம் பிளாஸ்டிக் பொம்மைகளை மொத்தமாக வாங்கி அதை கோவில் திருவிழா மற்றும் சாலையோரத்தில் வைத்து விற்பனை செய்து வந்தார். பெற்றோர் இறந்ததன் காரணமாக தர்மலிங்கம் கடந்த 2 ஆண்டுகளாக வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையிலேயே காணப்பட்டு வந்தார். பொம்மைகளை விற்கும் ஊரிலேயே சாப்பிட்டுவிட்டு அங்கேயே ஏதாவது ஒரு இடத்தில் தங்கி வந்தார். 15 நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவார். வீட்டிற்கு வந்தாலும், யாரிடமும் சரியாக பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ள அவர் வியாபாரத்திற்கு செல்லவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை குறித்த செய்திகள் மற்றும் போராட்டங்களை டி.வி.யில் பார்த்து வந்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது அவரது மனதில் மேலும் வேதனையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே நேற்று பிரதமர் மோடி சென்னை வருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும் தனது வீட்டு சுவரில் கலர் சாக்பீசால் மத்திய அரசே, கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர்.... தமிழகம் வரும் நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது. பா.தர்மலிங்கம் என்று எழுதி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கி விட்டார்கள். மனம் உடைந்து காணப்பட்ட தர்மலிங்கம் தற்கொலை செய்து கொள்வதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் எழுந்து மண்எண்ணெய் கேனுடன் வீட்டுக்கு வெளியே வந்தார். பின்னர் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். இதனால் உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடோடி வந்தார்கள்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே தர்மலிங்கத்தின் மீது பற்றிஎரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி தர்மலிங்கம் நேற்று இறந்தார். அவர் இறந்ததை அறிந்ததும் அங்கு கூடியிருந்த தர்மலிங்கத்தின் உறவினர்கள் கதறி அழுதார்கள். இது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொம்மை வியாபாரி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்