கர்ப்பிணி தற்கொலை
சென்னை வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். இவர், தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கும், வெங்கடேஸ்வரா நகர் 2-வது குறுக்கு தெருவைச் சேர்ந்த சோபனா (33) என்ற பெண்ணுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது சோபனா, 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். சோபனா, தனது தாய் லீலவேணி தனியாக இருப்பதால் சில நாட்களாக தாய் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று முன்தினம் அவரது தாய் வெளியே சென்று விட்டதால் வீட்டில் தனியாக இருந்த ஷோபனா, படுக்கை அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்றிருந்த அவருடைய தாய் லீலவேணி, வீட்டுக்கு திரும்பி வந்தபோது தனது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேளச்சேரி போலீசார், தூக்கில் தொங்கிய சோபனா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சோபனாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். மேலும் சோபனாவுக்கு திருமணமாகி 8 மாதங்களே ஆவதால் வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.