மாவட்ட செய்திகள்

போலீசாரை கண்டித்து தனியார் டவுன் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீர் போராட்டம்

புதுவையில் போலீசாரை கண்டித்து தனியார் பஸ் ஊழியர்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

புதுச்சேரி,

புதுவை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நகர மற்றும் கிராம பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. அவர்களுக்கிடையே பஸ்களை இயக்கும் நேரம் தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் நேற்று முன்தினம் இரவிலும் தனியார் பஸ் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பயணிகள் புறக்காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அந்த பஸ்களின் பெயர்பலகையை போலீசார் கழற்ற முயன்றனர். இதில் ஒரு பஸ்சின் பெயர் பலகை சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. போலீசார்தான் வேண்டுமென்றே சேதப்படுத்தி விட்டனர் என்று பஸ் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து அனைத்து தனியார் டவுன் பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் நேற்று காலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பஸ்களை பஸ் நிலையத்துக்குள் கொண்டு வராமல் ரோடியர் மில் மைதானத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மேலும் அங்கு டிரைவர்கள், கண்டக்டர்கள் திடீரென சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இந்த போராட்டத்தால் புதிய பஸ்நிலையத்தில் இருந்து கோரிமேடு, வில்லியனூர், வீராம்பட்டினம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை.

முன்னறிவிப்பு எதுவுமின்றி தனியார் பஸ்களை திடீரென இயக்காததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களும், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களும் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அரசு பஸ்கள், டெம்போ, ஆட்டோக்களில் ஏறிச்சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அரசு பஸ்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது.

தனியார் பஸ் ஊழியர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உருளையன்பேட்டை போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று பகல் 12 மணி முதல் தனியார் பஸ்கள் ஓடத்தொடங்கின.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி