கடலூர்,
கடலூர் புதுப்பாளையம் காமராஜ் நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வந்தது. இந்த நிலையில் நகராட்சி சார்பில் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்காமல், வேறு இடத்தில் ஒப்பந்ததாரர் வடிகால் அமைத்ததாக கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த அதிகாரிகள், நகராட்சி சார்பில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் வடிகால் அமைக்க வேண்டும் என ஒப்பந்ததாரரிடம் கூறினர். இந்நிலையில் ஒப்பந்ததாரர் நேற்று பணி இடத்தில் இருந்த உபகரணங்களை லாரியில் ஏற்றிக்கொண்டு வேறு இடத்துக்கு செல்ல முயன்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள், தங்கள் பகுதியில் வடிகால் அமைக்கும் பணியை முடிக்காமல், பொருட்களை எடுத்து செல்லக் கூடாது என கூறி லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.