மாவட்ட செய்திகள்

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் கல்வி, வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்: புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி

வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கும் கல்வி, வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

தினத்தந்தி

பாராட்டு விழா

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு தொடக்க கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவச கல்வி மற்றும் அம்பேத்கர் வீடு கட்டும் திட்டம் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அனைத்து ஆதிதிராவிடர், பழங்குடியின இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதுச்சேரி அரசுக்கு பாராட்டு விழா நேற்று தவளக்குப்பத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.எல்.ஏ. நீல.கங்காதரன் தலைமை தாங்கினார். முன்னதாகஅகில இந்திய தலித் உரிமை இயக்கம் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-

நான் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்றாலும் கூட, எனக்கு ஆதிதிராவிடர் சமுதாய மக்கள் மீது ஈர்ப்பு அதிகம் உள்ளது. நான் இன்று முதல்-அமைச்சராக நிற்கிறேன் என்றால், அது உங்களுடைய ஒத்துழைப்பால் தான் என்பதை எந்த காலத்திலும் மறக்க மாட்டேன். அதனை வெளிப்படையாக சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் தான் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர்.

அரசுக்கு நல்ல பெயர்

இந்த 2 திட்டங்களையும் கொண்டுவர நானும், அமைச்சர் கந்தசாமியும் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லோருக்கும் தெரியும். ஆண்டுகளுக்கு முன்பு இதற்கான கோப்பு தயார் செய்து கவர்னருக்கு அனுப்பினோம். ஆனால் கவர்னர் இந்த திட்டத்தை கொண்டு வந்தால் அரசுக்கு நல்லப்பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் 2 முறை கோப்பை திருப்பி அனுப்பினார்.இந்த காலக்கட்டத்தில் தான் நானும், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அமைச்சர் கந்தசாமியும் 10 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் விளைவாக நாம் வெற்றி பெற்றோம். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் இல்லை. புதுச்சேரி மாநிலம் முன்னோடியாக இருக்கிறது.

புதுச்சேரியை பார்த்து மற்ற மாநிலத்தவர்கள் கண்டிப்பாக இந்த கல்வித் திட்டத்தை செயல்படுத்துவார்கள். பட்ஜெட்டில் இருந்து 16 சதவீத நிதியை ஆதிதிராவிடர் சமுதாயத்துக்கு செலவிட நாங்கள் சட்டவரையறை தயார் செய்து அமைச்சரவையில் முடிவு செய்தோம். அதனை சட்டப்பேரவையில் கண்டிப்பாக நிறைவேற்றுவோம்.

கல்வி, வீடு கட்டும் திட்டம்

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் கல்வி, வீடு கட்டும் திட்டத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை. அதையும் நாங்கள் நிறைவேற்றுவோம்.ஆனால் அரசை குறைசொல்லவே சில கூட்டம் இருக்கிறது. அவர்கள் ஒன்றும் செய்யமாட்டார்கள். அவர்களின் தோலை தற்போது மக்கள் உரித்துக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் உங்களிடம் கேட்பது, நாங்கள் உங்களோடு இருக்கிறோம். நீங்களும் எங்களோடு இருக்க வேண்டும் என்பது தான்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, அரசு கொறடா அனந்தராமன், விஜயவேணி எம்.எல்.ஏ. மற்றும் பல்வேறு கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்