மாவட்ட செய்திகள்

ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

நாமக்கல்லில் பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரியை விடுவிக்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தாசில்தாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

நாமக்கல்,

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 48), மணல் லாரி உரிமையாளர். இவர் சம்பவத்தன்று மோகனூரில் இருந்து லாரியில் மணல் லோடு ஏற்றிக்கொண்டு ஓமலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தார். நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்சந்தை அருகே தாசில்தார் பாலகிருஷ்ணன் தலைமையிலான வருவாய்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மணல் லாரியை தாசில்தார் பாலகிருஷ்ணன் மடக்கி பிடித்தார்.

அவரிடம் லாரி டிரைவர் மணல் எடுத்து வருவதற்கான ஆவணங்களை காண்பித்தார். அப்போது விதிகளை மீறி இருந்ததும், கூடுதல் லோடு மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த தாசில்தார் பாலகிருஷ்ணன், நாமக்கல் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு வந்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்திகுமார், லாரி உரிமையாளருக்கு ரூ.54 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து தாசில்தாரிடம் அபராத தொகையை சின்னதம்பி செலுத்தினார். ஆனால் தாசில்தார் பாலகிருஷ்ணன், தனக்கு ரூ.10 ஆயிரம் தனியாக தரவேண்டும் என லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் சின்னதம்பி ரூ.5 ஆயிரம் தருகிறேன் என கூறி உள்ளார்.

இதற்கிடையே லஞ்சம் கொடுக்க மனம் இல்லாத சின்னதம்பி, நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயகுமாரிடம் நடந்த சம்பவத்தை கூறி புகார் செய்தார். அதன்படி நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சின்னதம்பியிடம் கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து தாசில்தார் அறைக்கு சென்ற சின்னதம்பி, தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாசில்தாரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் ரசாயன பவுடர் தடவிய பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதற்கிடையே தாசில்தார் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறை அலுவலர்கள் நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் திரண்டனர். அவர்கள் தாசில்தார் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராசிபுரம் தாசில்தார் ரத்தினம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்