தஞ்சாவூர்,
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று தஞ்சை வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தோல்வியை சந்திக்கும்
சசிகலா முழுமையாக குணம் அடைந்து வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பெங்களூருவில் அ.தி.மு.க. கொடி கட்டிய காரில் வலம் வந்தது உள்கட்சி பிரச்சினை. அது பற்றி நான் கருத்து கூற முடியாது. அவர் அ.தி.மு.க.வுக்கு மீண்டும் வந்தாலும், வராவிட்டாலும் ஒன்றும் ஏற்படப்போவதில்லை. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கண்டிப்பாக மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும்.வேளாண் திருத்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு 10 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தியும், விவசாயிகளின் ஒரு கோரிக்கை கூட ஏற்கப்படவில்லை. மாறாக விவசாயிகள் மீது மத்திய அரசு அடக்குமுறையை ஏவியுள்ளது. இது ஜனநாயக நாடாக தெரியவில்லை. இந்த நிலைமை நீடித்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபடும் சூழ்நிலை உருவாகும்.
மக்களிடையே வரவேற்பு
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை சீட் என்பதை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முடிவு செய்யும். தமிழகத்துக்கு ராகுல்காந்தி வருகைக்குப் பிறகு காங்கிரசுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருப்பதை காண முடிகிறது.
அவர் மீண்டும் பிப்ரவரி 15-ந் தேதிக்கு பிறகு தமிழகத்துக்கு வரவுள்ளார். எனவே காங்கிரசுக்கு மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு இருக்கிறது. அதற்கேற்றவாறு தொகுதிகள் எண்ணிக்கை அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.