மாவட்ட செய்திகள்

2-வது நாளாக மழை: எடப்பாடியில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின

சேலம் மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்தது. இதில் எடப்பாடியில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கின.

தினத்தந்தி

சேலம்,

சேலம் மாவட்டத்தில் கத்திரி வெயில் 100 டிகிரிக்கும் மேல் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியுற்று வருகின்றனர். இருந்தாலும் அவ்வப்போது மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில், சேலம், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

எடப்பாடி, கொங்கணாபுரம் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு விவசாய நிலங்களில் பயிரிடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட வாழைகள் மற்றும் சோளப்பயிர் ஆகியவை சாய்ந்து சேதமானது. இதேபோல் தேவூர் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்று வீசியதில் குள்ளம்பட்டியில் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சோளப்பயிர் சாய்ந்து சேதமானது.

2-வது நாளாக மழை

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பரவலாக மழை பெய்தது. எடப்பாடி, பூலாம்பட்டி பில்லுக்குறிச்சி, ஓடக்காட்டூர்,கூடக்கல் பகுதியில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

விவசாய தோட்டங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் புகுந்தது. இதனால் விவசாய தோட்டத்தில் விளைந்த எள், சோளம், கடலைசெடிகள் போன்ற பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் அப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டைகள் நேற்று பெய்த பலத்த மழையால் நிரம்பின. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எடப்பாடி பஸ் நிலையம்

எடப்பாடி பஸ் நிலையத்தில் பெய்த கனமழையால் பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் நிரம்பியதால் வாகனஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் பலத்த சூறாவளி காற்று வீசியதில் வியாபார கடைகளின் பேனர்கள், கடையின் முன்பு போடப்பட்ட பந்தல்கள் கீற்று தடுக்குகள் காற்றில் பறந்தன.

கொங்கணாபுரம்-ஓமலுர் சாலையில் கச்சுப்பள்ளி செல்லியாண்டியம்மன் கோவில் அருகில் புளியமரம் வேரோடு சாய்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மரக்கிளைகள் வெட்டப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது நாளாக கோடைமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் நேற்று இரவு 7 மணி முதல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு வரை இந்த மழை தொடர்ந்து பெய்தது. இதனால் ஏற்காடு நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்பட்டது. சேலம் மாநகரிலும் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-16.7, ஓமலூர்-12, வீரகனூர்-11, எடப்பாடி-10.4, காடையாம்பட்டி-6, சங்ககிரி-4.4, பெத்தநாயக்கன்பாளையம்-2, மேட்டூர்-1.8.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு