வரதராஜன்பேட்டை,
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விளந்தையில் ராமலிங்க சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலர், நவக்கிரக மூர்த்திகள், பரிவாரதெய்வங்கள் உள்ளன. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டதையொட்டி கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்கள் முடிவு செய்தனர்.
அதன்படி கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. அன்று அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகாசங்கல்பம், மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. நேற்று முன் தினம் 2-ம் கால யாகபூஜையும், பின்னர் 3-ம் கால யாகபூஜையும் நடத்தப்பட்டது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 4-ம் கால யாக பூஜை, கோ-பூஜை, கடம் புறப்பாடு நடைபெற்று. தொடர்ந்து சித்திவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சிங்காரவேலர், நவக்கிரக மூர்த்திகள், பரிவாரதெய்வங்கள், சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் ராஜகோபுரம், மூலஸ்தான விமான கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் ஆண்டிமடம் விளந்தை, கொளப்படி, சூரக்குழி, சூனாபுரி, கவரப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மூலவர், உற்சவமூர்த்தி, பரிவார தெய்வங்களுக்கு திரவிய சகலாபிஷேக மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல இக்கோவில் திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலையில் ஆண்டிமடம் சூனாபுரி ஏரிக்கரையிலிருந்து கலசம் ஜோடிக்கப்பட்டு தேவாங்கர் குல வீரகுமாரர்கள் அலகு குத்திக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இரவு அம்மன் திருவீதியுலா வந்தது. இதில் பக்தர்கள் தேங்காய், பழம், போன்ற பொருட்களை வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) ஆண்டிமடம் பஸ் நிலையம் அருகே உள்ள காட்டுக்கேணி குளக்கரையில் இருந்து கலசம் ஜோடிக்கப்பட்டு தேவாங்கர் குல வீரகுமாரர்கள் மற்றும் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் பாப்பி செட்டியூர் வீர குமாரர்களும், நாளை காலை ஆண்டிமடம்-விளந்தை காசாங்குட்டை குளக்கரையிலிருந்து கலசம் ஜோடிக்கப்பட்டு சேலம் அம்மாபேட்டை வீரகுமாரர்களும் அலகு குத்திக்கொண்டு கோவிலுக்கு வந்தடையும் நிகழ்ச்சி நடக்கிறது.