அலங்காநல்லூர்,
மதுரைய அடுத்த பாலமேடு பேரூராட்சியில் மாநில பேரிடர் நிவாரண திட்டத்தின்கீழ் புதிய குடிநீர் திட்டப்பணிகள் ரூ.1 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இதில் சாத்தியாறு அணை பகுதி உள்பட 5 இடங்களில் ஆழ்துளை கிணறு மற்றும் குழாய்கள் அமைப்பதற்கான பூமிபூஜை நேற்று சோழவந்தான் எம்.எல்.ஏ. மாணிக்கம் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) சாந்தகுமார், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் சேதுராமன், உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பூமி பூஜையையும், பணிகளையும் தொடங்கிவைத்தார். இந்த விழாவில் வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பாலமேட்டில் விழா முடிந்து அமைச்சர் தெத்தூர் வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது கெங்கமுத்தூர், மைல்கல் கிராமங்களை சேர்ந்த மக்கள் அமைச்சரை முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் தங்களது பகுதிக்கு முறையான குடிநீர் வரவில்லை. இதனால் தொலைதூரங்களுக்கு சென்று தோட்ட கிணறுகளில் குடிநீர் எடுத்து வருகிறோம். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்று பலமுறை சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினர். பின்னர் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராம மக்களிடம் அமைச்சர் தொவித்தார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் சோழவந்தான் அருகே உள்ள சித்தாலங்குடி கண்மாய் புனரமைக்கும் பணிக்காக ரூ.29 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கண்மாயை புனரமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பணியை தொடங்கிவைத்தார். இந்த விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மாணிக்கம், சரவணன், பெரியபுள்ளான், மதுரை கோட்டாட்சியர் முருகானந்தம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பிரமணி, தமிழ்நாடு கூட்டுறவு ஆணைய தலைவர் செல்லப்பாண்டி, தாசில்தார் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக திருமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கரடிக்கல் கண்மாய், சித்தாலை கண்மாய், சக்கிலியங்குளம் கண்மாய் ஆகிய கண்மாய்கள் புனரமைப்பு பணிகளையும் அமைச்சர் தொடங்கிவைத்தார்.