கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் தலைமையில் பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் பூவலம்பேடு சாலையில் நேற்று அதிகாலை வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை கண்டதும் ஆந்திராவில் இருந்து அந்த வழியாக வந்த கார் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டது. காரில் இருந்து 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டனர்.
போலீஸ் விசாரணையில், மேற்கண்ட காரில் 360 கிலோ எடை கொண்ட 12 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது. காருக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்களுக்கும் மேற்கண்ட காரில் செம்மரக்கட்டைகள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து செம்மரக்கட்டைகளுடன் காரையும், மோட்டார்சைக்கிளையும், பாதிரிவேடு போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஜி.ஆர்.கண்டிகை கிராமத்தை சேர்ந்த சின்னராசு (வயது 20) மற்றும் பாதிரிவேடு காலனியை சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரியவந்தது. போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
அரும்பாக்கம்
அதே போல ஆரம்பாக்கத்தை அடுத்த அரும்பாக்கம் என்ற இடத்தில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நேற்று காலை ஆரம்பாக்கம் போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். வேனில் 155 கிலோ எடை கொண்ட 11 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
வேனுடன், செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த ஆரம்பாக்கம் போலீசார், வேன் டிரைவரான ஆந்திர மாநிலம் நெல்லூரை அடுத்த வெங்கடகிரியை சேர்ந்த குருபிரசாத் (31) என்பவரை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், செம்மரக்கட்டைகள் மற்றும் கைது செய்யப்பட்ட 3 பேரையும், மாதர்பாக்கத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி வனசரக அலுவலகத்தில் வனசரகர் மணிவாசகத்திடம் போலீசார் ஒப்படைத்தனர்.