சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள லக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் மகள் அன்னைசத்யா(வயது 23). நர்சிங் படிப்பு முடித்துள்ள இவரும் அரசம்பட்டு கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் சிவராமன்(28) என்பவரும் கடந்த 4 வருடமாக காதலித்து வந்தனர். இதனால் சினிமா, பீச் என பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பின்னர் சிவராமனிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அன்னை சத்யா கூறினார். ஆனால் அவரோ திருமணத்துக்கு மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டி சிவராமன் வீட்டின் அருகே அன்னை சத்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் சிவராமன் வீட்டில் இருந்து யாரும் அவரை பார்க்க வராததால் ஆத்திரம்அடைந்த அவர் திடீரென தான் வைத்து இருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று அன்னை சத்யாவின் கையில் இருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இது குறித்து அரசம்பட்டு கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணத்துக்கு மறுத்த காதலன் வீட்டின் அருகே தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.