திருப்பூர்,
திருப்பூர் மங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது 39), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி(25). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் லட்சுமி, 2-வது பிரசவத்திற்காக கடந்த மாதம்(ஜூன்) 13-ந்தேதி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டார். இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அறுவை சிகிச்சை மூலம் லட்சுமிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இந்த அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததால், சிறுநீர் குழாய் அறுந்து விட்டதாகவும், இதற்கு பதிலாக செயற்கை சிறுநீர் குழாய் பொருத்தப்பட்டுள்ளதாகவும் லட்சுமியின் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த குழாய் கடந்த 21 நாட்கள் ஆகியும் அகற்றப்படாமல் அப்படியே சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் கேட்டால், செயற்கை சிறுநீர் குழாயை அகற்றினால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம் என்று டாக்டர்கள் கூறுவதாகவும், ஆனால் சிகிச்சை முறையில் என்ன தவறு நடைபெற்றது என்பதை தெளிவாக கூற மறுக்கின்றனர் என்றும் கூறினார்கள்.
இதனால் சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், லட்சுமிக்கு உயர்சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறி, உறவினர்கள் ஏராளமானோர் நேற்று அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டாக்டர்களிடம் கேட்டபோது, பிரசவ நேரத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையின் போது சிலருக்கு சிறுநீரகப்பை சுருங்கி விரிந்து கொண்டிருக்கும். இதனாலும், அறுவை சிகிச்சையால் ஏற்பட்டுள்ள உள் காயங்களால் நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கவும், சிறுநீர் குழாய் பொருத்தி, அதன் மூலம் சிறுநீர் வெளியேற்றப்படுவது இயல்பான ஒன்றுதான். உள்காயங்கள் ஆறிய உடன் அந்த குழாய் அகற்றப்படும் என்று கூறினார்கள்.