கோவை,
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜாமணி கலந்து கொண்டு கோவை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பெயர் பட்டியலை வெளியிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் எம்.எல்.ஏ., அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தங்கவேலு, காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து கலெக்டர் ராஜாமணி கூறியதாவது:-
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் படி கோவை மாவட்டத்தில் 14,68,222 ஆண் வாக்காளர்கள், 15,02,142 பெண் வாக்களர்கள், 3-ம் பாலினத்தவர் 369 என மொத்தம் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 33,920 பேர் அதிகமாக உள்ளனர்.
கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 29 லட்சத்து 91 ஆயிரத்து 923 வாக்காளர்கள் இருந்தனர். எனவே தற்போது 36 ஆயிரத்து 355 பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. இதில் இறந்தவர்கள் 24,727 பேர், வீடு மாறி சென்றவர்கள் 8,404 பேர், 2 இடத்தில் பெயர் இருந்த 3,224 பேர் ஆவர்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 15,165 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். இதில் ஆண்கள் 8,124 பேர், பெண்கள் 7,037 பேர், 3-ம் பாலினத்தவர் 4 பேர். கோவை மாவட்டத்தில் மொத்தம் 979 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மற்றும் 1.1.2021-ந் தேதி அன்று 18 வயது பூர்த்தி அடையும் நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். அதேபோல் பிழை திருத்தம், முகவரி மாற்றம் பெயர் நீக்கம் உள்ளிட்டவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் வருகிற 15.12.2020 வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்குப்பதிவு மையங்கள், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் வழங்கலாம்.
வருகிற 21 மற்றும் 22 ந் தேதிகளிலும், 12.12.2020 மற்றும் 13.12.2020- ஆகிய 4 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும். அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6-ம், பெயர் நீக்க படிவம் 7-ம், திருத்தம் செய்ய படிவம் 8-ம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றத்திற்கு படிவம் 8ஏ மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வேறு சட்டமன்ற தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்கள் படிவம் 6-ம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்கள் செய்வது தொடர்பாக www.nvsp.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அல்லது voters HelpLine app என்ற செயலி மூலம் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் வருகிற 20.1.2021 அன்று வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.