மாவட்ட செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள் இடமாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க இன்று முதல் மார்க்கெட்டுகள், உழவர் சந்தைகள் இடமாற்றம் செய்யப்படுகிறது.

தினத்தந்தி

ஊட்டி,

கொரோனா பரவலை தடுக்க இன்று (திங்கட்கிழமை) முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது. காய்கறி, மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது. பால் வினியோகம், மருந்தகங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்க அனுமதி உள்ளது.

வேளாண்மை உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை, மாட்டு தீவனங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், அத்தியாவசிய பொருட்களை வாங்க ஊட்டியில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

இதனால் சமூக இடைவெளியை கடைபிடிப்பது கேள்விக்குறியாகுவதால், கொரோனா பரவும் அபாயம் நீடிக்கிறது. இதையொட்டி தடுப்பு நடவடிக்கையாக ஊட்டி நகராட்சி மார்க்கெட், உழவர் சந்தையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதேபோல் குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் மார்க்கெட்டுகள், உழவர் சந்தை இடமாற்றம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

உழவர் சந்தைகள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பொருட்களை வாங்க அதிகம் கூட்டம் கூடுவதை தவிர்க்க இடமாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி இன்று முதல் ஊட்டி உழவர் சந்தை என்.சி.எம்.எஸ். வாகன நிறுத்துமிடத்துக்கும், ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள கடைகள் காந்தி விளையாட்டு மைதானம் மற்றும் ஊட்டி மத்திய பேருந்து நிலையத்துக்கும், குன்னூர் மார்க்கெட் பகுதி குன்னூர் பஸ் நிலையம் மற்றும் வாகன நிறுத்துமிடத்துக்கும், கோத்தகிரி மார்க்கெட் பகுதி காந்தி விளையாட்டு மைதானத்துக்கும், கூடலூர் மார்க்கெட் பகுதி புனித ஜோசப் பள்ளி மைதானத்துக்கும்,

கூடலூர் உழவர் சந்தை காந்தி திடல் பகுதிக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரே இடத்தில் மக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும். இருப்பினும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது, கூட்டமாக நிற்பதை தவிர்ப்பது போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்