நாமக்கல்,
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி கேட்டு அவரது அறை முன்பு அமர்ந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அமர்ந்து 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கோரிக்கை முழக்கம் எழுப்பினர்.
இதையடுத்து தர்ணாவில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் போலீசாரால் தலைமை செயலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால் வெளியே வந்த மு.க.ஸ்டாலின் அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மணிக்கூண்டு அருகில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பார்.இளங்கோவன் தலைமை தாங்கினார். நகர பொறுப்பாளர் மணிமாறன் முன்னிலை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தின் போது மு.க.ஸ்டாலினை விடுதலை செய்யக்கோரியும், தமிழக அரசுக்கு எதிராகவும் தி.மு.க.வினர் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சம்பத்குமார், சரஸ்வதி, மாநில மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் ராணி, மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் மகாலட்சுமி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். இவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் கைது செய்தனர். 8 பெண்கள் உள்பட 45 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை மினிபஸ் ஒன்றில் ஏற்றிய போலீசார் திருமண மண்டபம் ஒன்றில் தங்க வைத்தனர்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க. செயலாளர் என்.ஆர்.சங்கர் தலைமையில் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். இதில் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாலு, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் மோகன், மாவட்ட வர்த்தக அணி துணை தலைவர் தவசி நந்தகுமார், நகர அவைத்தலைவர் அமிர்தலிங்கம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், நகர துணை செயலாளர் ஆனந்தன், வக்கீல் கீதாலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ராசிபுரம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 16 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
அதேபோல் ராசிபுரம் ஒன்றிய தி.மு.க. சார்பில் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட்டில் ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.ஜெகநாதன் தலைமையில் தி.மு.க.வினர் மறியல் செய்தனர். இதில் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் வனிதா செங்கோட்டையன் உள்பட ஒன்றிய கழக நிர்வாகிகள், பேரூர் கிளைக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது ராசிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.
சேந்தமங்கலம் சின்ன தேர்நிலையம் அருகில் நாமக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பொன்னுசாமி தலைமையில், சேந்தமங்கலம் நகர செயலாளர் தனபாலன் முன்னிலையில் மறியல் நடந்தது. இதில் பங்கேற்ற 30 தி.மு.க.வினரை சேந்தமங்கலம் போலீசார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதேபோல கொல்லிமலை - செம்மேடு பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் காளியப்பன் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 10 பேர் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையம் - பள்ளிபாளையம் பிரிவு ரோட்டில் நகர தி.மு.க. செயலாளர் வெங்கடேசன் தலைமையில், மாவட்ட துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் 70-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனே அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.