மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு ரூ.1¾ கோடி வருவாய்

தைப்பூசத்தையொட்டி உண்டியல் திறக்கப்பட்டதில், பழனி முருகன் கோவிலுக்கு ரூ.1¾ கோடி வருவாய் கிடைத்தது. அதில் வெள்ளி, தங்க பொருட்களும் காணிக்கையாக கிடைத்தன.

தினத்தந்தி

பழனி:

தைப்பூச திருவிழா

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதிலுள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த 12-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலால் பக்தர்கள் இன்றி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனினும் லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

உண்டியல் காணிக்கை

இந்தநிலையில் தைப்பூச திருவிழாவுக்கு பிறகு உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் இன்று நடந்தது. இதற்கு கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், மதுரை உதவி ஆணையர் கலைவாணன், மதுரை நகை சரிபார்ப்பு அலுவலர் பொன்சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் அலுவலர்கள், பழனி பகுதியில் உள்ள வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

ரூ.1 கோடி வருவாய்

இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 77 லட்சத்து 36 ஆயிரத்து 750 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 75 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்தன. அதன்படி தங்கம் 267 கிராம், வெள்ளி 11 கிலோ (11,251 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 27-ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்