வெளிப்பாளையம்:
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜிடம்,
அகில இந்திய குலாலர் முன்னேற்ற கழகம் சார்பில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் மழைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் 5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வீட்டுமனைப்பட்டா
நாகூர் பண்டகசாலை தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த மனுவில், நாகை 4-வது வார்டு பண்டகசாலை தெருவில் வெட்டாறு புறம்போக்கு பகுதியில் ஆதிதிராவிடர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகிறோம். ஆனால் இது வரை எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்படவில்லை. பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நாங்கள் வசிக்கும் இடத்தை கையகப்படுத்தி வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கொடுத்த மனுவில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அனைத்து இஸ்லாமியர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.