மாவட்ட செய்திகள்

சேலம் விம்ஸ் மருத்துவமனையில் அரசு விதிமுறைப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது - டாக்டர் சந்திரசேகரன்

அரசு விதிமுறைப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது என டாக்டர் சந்திரசேகரன் கூறினார்.

தினத்தந்தி

சேலம்,

சேலம் விம்ஸ் மருத்துவமனையில் அரசு விதிமுறைப்படியே உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது என்று முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்திரசேகரன் கூறினார்.

சேலம் விம்ஸ் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் சந்திரசேகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் கன்னிமாரி நெல்லிமேட்டை சேர்ந்த பேச்சியப்பன் மகன் மணிகண்டன் (வயது24). இவர் தனது நண்பர்கள் 5 பேருடன் கடந்த 18-ந்தேதி சென்னையில் இருந்து கேரளா சென்ற போது கள்ளக்குறிச்சி அருகே விபத்துக்குள்ளானார். இவர்களுக்கு சேலம் விம்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களிடம் பணம் இல்லாத போதும் சிகிச்சை அளிக்கப்பட்டது. தலையில் படுகாயம் அடைந்த மணிகண்டனின் தலையை ஸ்கேன் செய்த போது, மூளையில் அதிக ரத்த கசிவு ஏற்பட்டு உள்ளது தெரியவந்தது. மேலும் சிறு மூளை சிதைந்து இருந்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு 2 நாள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 3-வது நாள் அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இது குறித்து அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் மணிகண்டன் உடல் உறுப்பு தானம் கொடுக்கலாம். இல்லை என்றால் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லலாம் என்று அவர்களிடம் கூறினோம். அப்போது உடல் உறுப்பு தானம் செய்கின்றோம் என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு மற்றொரு தரப்பினர் மறுப்பு தெரிவித்தனர். அடுத்த நாள் இரண்டு தரப்பினரும் சேர்ந்து முழு மனதுடன் உறுப்பு தானம் கொடுக்கிறோம் என்று கூறினர்.

உறுப்பு தானத்துக்கு பணம் கொடுக்க கூடாது, யாருடைய கட்டாயத்திலும் செய்யக்கூடாது என அவர்களிடம் கூறினோம். அதன்பிறகு மணிகண்டன் உறவினர்களிடம் எழுத்துப்பூர்வமாக எழுதினோம். பின்னர் இது குறித்து தமிழக அரசு உறுப்பு தான சேவை பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு தான் மணிகண்டன் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டு 4 பேருக்கு பொருத்தப்பட்டது. ஆனால் அதற்கு ரூ.3 லட்சம் கேட்டோம் என்றும், பணம் கட்ட மறுப்பதால் உறுப்புகளை எடுத்துக்கொண்டோம் என்பதும் மிகவும் தவறான தகவல். மேலும் கேரளாவிற்கு செல்ல ரூ.25 ஆயிரம் பணம் கேட்டோம் என்பதும் பொய்யான தகவல். உடல் உறுப்பு தானம் சமூக சேவையாக நடத்தப்படுகிறது. எனவே சேலம் விம்ஸ் மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானம் அரசு விதிமுறைப்படியே செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சேலம் விம்ஸ் மருத்துவமனை இயக்குனர் மீனாட்சி சுந்தரம், தலைமை டாக்டர் பாலாஜி, இந்திய மருத்துவ சங்க சேலம் மாவட்ட தலைவர் நடராஜு, முன்னாள் தேசிய துணை தலைவர் டாக்டர் பிரகாசம் ஆகியோர் உடனிருந்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு