மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமரா காட்சிகளை பெற தொழில்நுட்ப வல்லுனர்களை நாடிய சி.பி.ஐ. பரபரப்பு கட்டத்தை எட்டிய விசாரணை

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீஸ் நிலைய கண்காணிப்பு கேமராவில் அழிந்துபோன காட்சிகளை திரும்ப பெற தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியை சி.பி.ஐ. நாடி உள்ளது. மேலும் காவலில் எடுத்த 5 போலீசாரிடம் நடத்திய அதிரடி விசாரணையால் பரபரப்பு கட்டத்தை எட்டி உள்ளது.

தினத்தந்தி

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 10 போலீசார், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முதல் 5 குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட போலீசாரை, காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சி.பி.ஐ. மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிபதி, அவர்களை இன்று (வியாழக்கிழமை) வரை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 போலீசாரும், சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையிலான அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டனர். அதன்பின்னர் அவர்கள் 5 பேரும் மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு 5 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் தனித்தனியாக அதிரடி விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில் போலீஸ்காரர் முத்துராஜாவை மட்டும் சி.பி.ஐ. அதிகாரிகள் சிலர் மதுரையில் இருந்து சாத்தான்குளத்திற்கு நேற்று முன்தினம் இரவு அழைத்து சென்றனர். அங்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, அங்கு சம்பவத்தன்று நடந்த நிகழ்வுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.

அதன்பின்னர் போலீஸ்காரர் முத்துராஜாவை அங்கிருந்து மதுரை சி.பி.ஐ. அலுவலகத்திற்கு நேற்று அதிகாலை 3 மணிக்கு அழைத்து வந்தனர்.

பின்னர் போலீஸ்காரர் முத்துராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் விடிய, விடியவும், நேற்று பகலிலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட போலீசாரிடம் தனித்தனி அறைகளில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர்.

நேற்று மதியம் 1 மணி வரை அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் மதிய உணவு அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து மதியம் 2 மணிக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களின் வாகனத்தில் சாத்தான்குளத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். அங்கு நடந்த சம்பவம் குறித்து நடித்து காட்டி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியானது. சி.பி.ஐ. காவல் விசாரணை முடிந்து இன்று (வியாழக்கிழமை) மதியம் அவர்கள் மீண்டும் மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேரிடமும் சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.

இதற்கிடையே ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த டாக்டர், சிறை அதிகாரி, சாட்சி கூறிய கைதி உள்பட சிலரிடம் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள இருப்பதாக சி.பி.ஐ. வட்டார தகவல்கள் வெளியாகின.

இதுதவிர சம்பவத்தன்று சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி அழிந்து போன காட்சிகளை திரும்ப பெறுவதற்காக, அதற்குரிய ஹார்டு டிஸ்க்கை சரிசெய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் உதவியை சி.பி.ஐ. நாடி இருப்பதாகவும் தெரியவருகிறது. இதன் மூலம் சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை பரபரப்பு கட்டத்தை எட்டி உள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்